Thursday, February 27, 2014

மார்ஷல் நேசமணி மணி மண்டபம்: ஜெயலலிதா திறந்து வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
நாட்டின் விடுதலைக்காக பாடுபட்ட சுதந்திர போராட்ட வீரர்களையும், ஆங்கிலேயே ஏகாதிபத்தியத்திற்கு எதிராக குரல் கொடுத்து தங்கள் இன்னுயிரை ஈந்த தியாகிகளையும், சமுதாய மேம்பாட்டிற்காக பாடு பட்டவர்களையும் போற்றிப் பெருமைப்படுத்தும் வகையில் நினைவு மண்டபங்கள், திருவுருவச் சிலைகள் அமைத்தல் போன்ற பணிகளை முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அரசு மேற்கொண்டு வருகிறது.
தமிழர்களின் சமூக பண்பாட்டு விடுதலைக்காகவும், தமிழகத்தின் தென் எல்லையாக கன்னியாகுமரியை தாய்த்தமிழகத்துடன் தக்க வைத்துக் கொள் வதற்காகவும் போராட்டங் கள் நடத்தி தியாகம் செய்தவர் நேசமணி. இதனால் இவர் மார்ஷல் நேசமணி என்றும், குமரித்தந்தை என்றும் கன்னியாகுமரி மாவட்ட மக்களால் அன்போடு அழைக்கப்படும் பெருமை பெற்றவர் ஆவார். மார்ஷல் நேசமணி நாகர்கோவில் நகர்மன்றத் தலைவராகவும் சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினராகவும் பதவிகள் வகித்து மக்களுக்கு தொண்டு செய்தவர் ஆவார்.
முதல்–அமைச்சர் ஜெயலலிதா மார்ஷல் நேசமணியின் அரும்பணியை நினைவு கூர்ந்து அவரை பெருமைப்படுத்தும் வகையில் கன்னியாகுமரி மாவட்டம் தாய்த்தமிழகத்துடன் இணைந்த நாளான நவம்பர் 1-ஆம் தேதியன்று நாகர் கோவிலில் அமைந்துள்ள மார்ஷல் நேசமணியின் திருவுருவச்சிலைக்கு தமிழக அரசின் சார்பில் ஆண்டு தோறும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி அரசு விழாவாகக் கொண்டாட ஆணையிட்டார்.
மார்ஷல் நேசமணியின் நினைவைப் போற்றும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், நாகர்கோவிலில் மார்ஷல் நேசமணியின் மார்பளவு வெண்கலச் சிலையுடன் 48 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மார்ஷல் நேசமணி மணிமண்டபத்தை முதல்–அமைச்சர் ஜெயலலிதா இன்று காணொலிக் காட்சி மூலமாகத் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பச்சைமால், செய்தி மற்றும் சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, தலைமைச் செயலாளர் ஷீலா பாலகிருஷ்ணன், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறைச் செயலாளர் முனைவர் இராசாராம், செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் குமரகுருபரன், மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.