Saturday, February 22, 2014

தேர்தலுக்குப்பின் தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை: அத்வானி


“பா.ஜ.க.வின் நல்லநேரம் ஆரம்பித்துவிட்டது. வருகின்ற மக்களவை தேர்தலில் பா.ஜ.க. பெரும்பான்மையான இடங்களில் வெற்றிபெற்று ஆட்சியமைக்கும். எனவே தொங்கு பாராளுமன்றம் என்ற கேள்விக்கே இடமில்லை” என்று பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி தெரிவித்தார்.

இன்று பா.ஜ.க தலைமையகத்தில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் அத்வானி பேசுகையில், “காங்கிரஸ் அரசுக்கு இது கெட்ட நேரம். சுதந்திர இந்தியாவில் இதுவரை நடைபெற்ற தேர்தல்களில் இல்லாத அளவிற்கு ஊழல்மிக்க காங்கிரஸ் இத்தேர்தலில் படுதோல்வி அடையும்.

காங்கிரசின் ஊழல் நடவடிக்கைகள், அதன் கொள்கைகளே அதன் வீழ்ச்சிக்கு காரணமாக அமையும். மாறாக பா.ஜ.க பெரும் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மை பெறும்” என்று தெரிவித்தார்.

இப்பேட்டியின்போது பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் உடனிருந்தார்.

அரசியல் தலைவர்களுடன் நேரடியாக பேஸ் புக்கில் பேச புது வசதி

புதுடெல்லி: இந்தியாவில் சமூக இணைய தளம் மூலமாக பிரபல அரசியல்வாதிகளிடம் நேரடியாக கேள்வி கேட்கும் வசதியை பேஸ் புக் இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் 2014 ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் 6 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளில் தேசிய தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர். தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது தற்போது புதிய உத்தியாக உள்ளது. இதில்  பேஸ் புக், டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் ஏற்கனவே நாட்டு நடப்பு குறித்தும், தங்கள் கொள்கைகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்தும் கருத்துக்களை அரசியல்வாதிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பிரபல அரசியல்வாதிகள் மக்களுடன் நேரலையில் கலந்துரையாட பேஸ்புக்கில் தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மார்ச் 3ம் தேதி முதல் செயல்படும். இதில் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதன்முதலில் மார்ச் 3ம் தேதி அன்று மோடி மக்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கின் பொது மேலாளர் அன்கி தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் மட்டும் மாதந்தோறும் 9.3 கோடி பேர் பேஸ் புக் பயன்படுத்துகிறார்கள். தற்போதுள்ள அரசியல் சூழலில் பேஸ்புக் வழியாக நல்லதொரு விவாத மேடையை ஏற்படுத்தி தர முடியும்.

எனவே, இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகளுடன் நேரடியாக விவாதம் செய்ய வசதியாக பேஸ்புக்கில் தனியாக பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களிடம் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவுகளை மக்கள் பார்ப்பது மட்டுமல்லாமல் பகிரவும் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் ஒன்றிணைக்கப்படும்’ என்று கூறியுள்ளார். அறிவியல் வளர்ச்சியை தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதில் எப்போதும் போல மோடி முன்னணியில் இருக்கிறார்

அருணாச்சலபிரதேசம், அசாம், திரிபுரா மாநிலங்களில் இன்று மோடி பிரசாரம்

பாரதீய ஜனதா பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி நாடு முழுவதும் தேர்தல் பிரசாரம் செய்து ஆதரவு திரட்டி வருகிறார்.
வடகிழக்கில் உள்ள 3 மாநிலங்களில் இன்று பிரசாரம் செய்ய அவர் திட்ட மிட்டார்.
அதன்படி நரேந்திர மோடி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள பசிகாட் பகுதியில் முதலில் பிரசாரம் செய்தார். அங்கு நடந்த பொதுக்கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
அருணாச்சல பிரதேச மக்கள் துணிச்சலானவர்கள். அவர்கள் சீனர்களை தலை தூக்க விடுவதில்லை. இங்குள்ளவர்கள் சீனாவை பார்த்து பயப்படுவதில்லை. இங்கு நான் கனத்த மனதுடன் வந்துள்ளேன். இம்மண்ணில் பிறந்த மாணவர் டெல்லியில் கொலை செய்யப்பட்ட சம்பவமே அதற்கு காரணம்.
அருணாச்சல பிரதேச மக்களை பார்த்த பிறகுதான் இந்திய பகுதிகளை சூரிய பகவான் பார்க்கிறார்.
உங்களின் மிகப்பெரிய பிரச்சினை வளர்ச்சிதான். மக்களை வளர்ச்சி பாதையில் கொண்டு செல்ல பாரதீய ஜனதா உறுதி பூண்டுள்ளது. இறந்த மாணவனின் குடும்பத்துக்காக நான் பிரார்த்தனை செய்கிறேன். உங்களது உடலில் ஓடும் ரத்தம்தான் எனது உடலிலும் ஓடுகிறது. பரம்பரை ஆட்சி, சிபாரிசு ஆகியவை வளர்ச்சிக்கு உதவாது. தாமரை ஆட்சி மலர்ந்தால் வளமும், வளர்ச்சியும் பெருகும்.
இவ்வாறு மோடி பேசினார்.
இதைத் தொடர்ந்து அசாம் (சில்சார்), திரிபுரா (அகர்தலா) ஆகிய மாநிலங்களுக்கு சென்று தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசுகிறார்.

தே.மு.தி.க.–பா.ம.க.–ம.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு: பொன்.ராதாகிருஷ்ணன்

தே.மு.தி.க. – பா.ம.க.– ம.தி.மு.க.வுடன் விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும் என்று பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
தமிழ்நாடு பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் தாமரையின் சமூக நீதி மாநாடு திருப்பாலை கிருஷணன் கோவில் மைதானத்தில் நடந்தது. மாநாட்டுக்கு பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநிலத்தலைவர் முருகன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர்கள் பழனிவேல்சாமி, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மாநாட்டில் பாரதீய ஜனதா கட்சியின் எஸ்.சி. பிரிவின் அகில இந்திய தலைவர் சஞ்சய் பாஸ்வான், பாரதீய ஜனதா கட்சியின் மாநிலதலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.
மாநாட்டில் சஞ்சய் பாஸ்வான் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் நீங்கள் எல்லோரும் காங்கிரஸ் கட்சியை தூக்கி எறிந்து விட்டீர்கள். காங்கிரஸ் இல்லாத தமிழகம் வேண்டும் என்ற உங்களது விருப்பத்தை பாராட்டுகிறேன். அதே போன்று காங்கிரஸ் இல்லாத பாரதம் வேண்டும் என்ற நோக்கத்தோடு நீங்கள் செயல்பட வேண்டும். அதற்காக மக்களை சந்தித்து காங்கிரஸ் கட்சியின் நிர்வாக திறமையின்மை, ஊழல் போன்றவற்றை எடுத்துக்கூற வேண்டும். பொருளாதார ரீதியாக தாழ்த்தப்பட்ட மக்கள் இன்னும் பின்தங்கிய நிலையிலே இருந்து வரு கிறார்கள்.
பாரதீய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்ததும் தாழ்த்தப்பட்ட மக்களின் பொருளாதார நிலையை உயர்த்த அனைத்து நடவடிக்கைகளும் மேற் கொள்ளப்படும். தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த ஒவ்வொருவரின் குடும் பத்திலும் ஒருவருக்கு வேலை உறுதி என்ற திட்டம் செயல்படுத்தப்படும்.
இவ்வாறு சஞ்சய் பாஸ்வான் பேசினார்.
மாநாட்டில் பொன்.ராதா கிருஷ்ணன் பேசும்போது கூறியதாவது:–
தமிழகத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் பா.ஜ.க. அமைக்க உள்ள கூட்டணியை உன்னிப்பாக கவனித்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணிதான் தமிழகத்திலும், மத்தியிலும் முதல்நிலை கூட்டணியாக திகழும். நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்பது அனைவரது மனதிலும் உள்ளது.
தேர்தல் முடிவில் இது வெளிப்படும். குஜராத் மாநிலத்தில் படிக்காத பெண்களே இல்லை என்ற நிலையை நரேந்திர மோடி ஏற்படுத்தி உள்ளார். நரேந்திரமோடி பிரதமராக பொறுப்பேற்றால் தான் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோரின் நிலை உயரும்.
இவ்வாறு பொன்.ராதா கிருஷ்ணன் பேசினார்.
மாநாட்டு முடிவில் பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களிடம் ‘‘தே.மு.தி.க., பா.ம.க., ம.தி.மு.க. இந்திய ஜனநாயக கட்சி (ஐ.ஜெ.கே.) ஆகிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது. விரைவில் தொகுதி உடன்பாடு ஏற்படும்’’ என்று கூறினார்.

உக்ரைனில் போராட்டக்காரர்களின் கை ஓங்கியது: தலைநகரை விட்டு அதிபர் வெளியேறினார்

உக்ரைனை ஐரோப்பிய யூனியனுடன் இணைக்க அதிபர் விக்டர் யானுகோவிச் மறுத்ததையடுத்து கடந்த 3 மாதமாக தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. அதிபர் பதவி விலக வேண்டும் என்றும், புதிய தேர்தலை அறிவிக்க வேண்டும் என்றும் பேராட்டக்காரர்கள் வலியுறுத்தி வருகின்றனர். அதிபருக்கு எதிராக சமீபத்தில் லட்சக்கணக்கானோர் பேரணி நடத்தி அரசுக்கு கடும் நெருக்கடி ஏற்படுத்தினர்.

இந்நிலையில், தலைநகர் கீவ் தங்களின் முழு கட்டுப்பாட்டிற்குள் வந்துள்ளதாக போராட்டக்காரர்கள் அறிவித்துள்ளனர். இதையடுத்து அதிபர் விக்டர் யானுகோவிச், தலைநகரை விட்டு வெளியேறிவிட்டதாக எதிர்க்கட்சி தலைவர் விட்டாலி கிளிட்ஸ்கோ பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். மேலும், மே மாதம் 25-ம் தேதிக்குள் அதிபர் தேர்தலை நடத்த வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

அரசியல் நெருக்கடி முற்றியதையடுத்து தனது அதிகாரங்களை ஒப்படைத்த அதிபர், முன்கூட்டியே தேர்தலை நடத்த ஒப்புக்கொண்டதுடன் கிழக்கு உக்ரைனில் உள்ள தனது சொந்த ஊருக்கு சென்றுவிட்டதாக ஊடக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிரதமர் ஆவேன் : லாலு பிரசாத்

கால்நடை தீவன ஊழல் வழக்கு என்னுடைய பிரதமர் ஆசையை கட்டுப்படுத்தாது. நானும் ஒருநாள் பிரதமராக வருவேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் லாலு பிரசாத் தெரிவித்துள்ளார்.பாஜ, பிரதமர் வேட்பாளராக மோடியை அறிவித்து பிரசாரம் செய்து வருகிறது. அதேபோல் காங்கிரசிலும் மறைமுகமாக ராகுலை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி பிரசாரம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பல்வேறு மாநில கட்சிகளைச் சேர்ந்த தலைவர்களும் பிரதமர் ஆகி விட வேண்டும் என்ற கனவில் இருக்கின்றனர். இதில் ஏற்கனவே முலாயம் சிங், மம்தா பானர்ஜி, மாயாவதி போன்றோர் வெளிப்படையாக அறிவித்துள்ளனர். அதே போல் தமிழகத்தில் முதல்வர் ஜெயலலிதாவும் பிரதமர் ஆக வேண்டும் என அதிமுகவினர் பிரசாரம் செய்து வருகின்றனர்.

இவ்வாறு பிரதமர் பதவியை பிடிப்பதற்கு பலரும் வரிசையில் நின்று கொண்டிருக்கையில் அவர்களை போல் பிரதமர் ஆசையை பீகாரின் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவும் வெளிப்படுத்தியுள்ளார். இவர் கால்நடை தீவன ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டு தற்போது வெளியில் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.இதுகுறித்து அவர் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தீவன ஊழல் வழக்கு எனது பிரதமர் கனவுக்கு முட்டுக்கட்டை போட முடியாது. நானும் ஒருநாள் இந்த நாட்டின் பிரதமராக வருவேன். ஒருநாள் என் மீதான குற்றச்சாட்டுகள் பொய் என்று ஆணை வரும். அப்போது நான் பிரதமராக வருவதை யாராலும் தடுக்க முடியாது என்றார்.

பாகிஸ்தானில் தீவிரவாதிகள் மறைவிடம் மீது ராணுவ ஹெலிகாப்டர் குண்டுவீச்சு: 9 பேர் சாவு

வடமேற்கு பாகிஸ்தானின் ஹங்கு மாவட்டம், தால் நகரம் அருகே தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று அதிகாலையில் ஹெலிகாப்டரில் விரைந்த ராணுவ வீரர்கள், தீவிரவாதிகள் இருப்பதாக கூறப்பட்ட வளாகத்தின்மீது குண்டுகள் வீசி தாக்குதல் நடத்தினர். இதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

அங்கு பதுங்கியிருந்தவர்கள் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்துவதற்கு திட்டமிட்டிருந்ததாகவும், ராணுவ தாக்குதலில் 9 பேர் இறந்ததாகவும் பாதுகாப்பு படை வட்டாரங்கள் உறுதி செய்தன.

திண்டுக்கல் அருகே ஜல்லிக்கட்டில் மாடு முட்டி சிறுவன் பலி

திண்டுக்கல் அருகே உள்ள கிராமம் தவசிமலை. இங்குள்ள கோவிலில் திருவிழா நடைபெற்று வருகிறது. விழாவை முன்னிட்டு இன்று ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சீறிப்பாய்ந்து வந்த காளைகளை ஏராளமான இளைஞர்கள் அடக்க முயற்சி செய்தனர். இதில் 18க்கும் மேற்பட்டவர்கள் காயம் அடைந்தனர்.

ஒரு காளை திறந்து விட்டதும், சீறிக்கொண்டு பார்வையாளர்கள் பகுதிக்கு சென்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருந்தவர்களை முட்டித்தள்ளியது. இதில் சிவக்குமார் என்ற 12 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான்.

மக்களவைத் தேர்தல் அறிவிப்பு 10 நாட்களில் வெளியாகிறது!

டெல்லி: மக்களவைத் தேர்தல் தேதியை 10 நாட்களில் வெளியிட தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. தலைமைத் தேர்தல் ஆணையர் சம்பத் தலைமையில் தேர்தல் ஆணையர்கள் மற்றும் அதிகாரிகள் மக்களவைத் தேர்தல் தொடர்பான இறுதிகட்ட ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். சில தினங்களுக்கு முன் தேர்தல் கட்டுப்பாடுகள் தொடர்பாக, அரசியல் கட்சித் தலைவர்களுடன் தேர்தல் ஆணையம் ஆலோசனையில் ஈடுபட்டது. தொடர்ந்து மாநில தலைமைச் செயலர்கள், காவல்துறை தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை நடத்திய தேர்தல் ஆணையர்கள் அடுத்த 3 மாதங்களில் வரஉள்ள பள்ளி, கல்லூரி தேர்வுகள் மற்றும் பண்டிகைகள் குறித்தும் ஆலோசனை நடத்தினர்.

மேலும் மாநிலங்களிலுள்ள பதற்றமான வாக்குச்சாவடிகள், தேர்தல் பாதுகாப்புக்கு தேவைப்படும் பாதுகாப்பு படைகளின் எண்ணிக்கை குறித்தும் அப்போது விவாதிக்கப்பட்டது. இதையடுத்து மக்களவைத் தேர்தல் தொடர்பாக மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் இறுதிகட்ட ஆலோசனை நடைபெற்றுள்ளது. இதில் 6 கட்டங்களாக தேர்தலை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தேர்தல் நடைபெறும் தேதிகளை 10 நாட்களுக்குள் அதிகாரபூர்வமாக அறிவிக்கவும் தேர்தல் ஆணையம் தீர்மானித்துள்ளதாக தெரிகிறது. அநேகமாகவரும் 27-ம் தேதி முதல் மார்ச் 3-ம் தேதிக்குள் தேர்தல் தேதி முறைப்படி அறிவிக்கப்படும் என்ற கூறப்படுகிறது.

நளினி–முருகன் உருக்கமான சந்திப்பு


ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என அறிவித்தது.
இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
வேலூர் ஜெயிலில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது.
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி, முருகன் சந்திப்பு இன்று நடந்தது.
வேலூர் நிலஅபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையிலான போலீசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். காலை 7.30 மணி முதல் 8 மணி வரை முருகன்–நளினி சந்தித்து பேசினர்.
அப்போது தூக்குதண்டனை ரத்து குறித்தும், லண்டனில் டாக்டருக்கு படிக்கும் மகள் அரித்ரா பற்றியும் உருக்கமாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
விடுதலை தடை செய்யப்பட்டது குறித்து பேசிய போது நளினி கண்ணீர் மல்க பேசியுள்ளார். சந்திப்புக்கு பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பு சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

காந்தி பேரனைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி பேரன் ஆம் ஆத்மி வேட்பாளராக போட்டி

ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் முதல் பட்டியலை அறிவித்தது. இதில் பிரபல சமூக சேவகி மேதா பட்கர் (மும்பை வட கிழக்கு), முகேஷ் பிஸ்வாஸ் (அமேதி) உள்ளிட்ட 20 பேர் பெயர் இடம் பெற்றது.
அடுத்ததாக 2–வது பட்டியலை வெளியிட ஆம் ஆத்மி கட்சி தயாராகி வருகிறது. வேட்பாளர்களை இறுதி செய்வதில் அந்த கட்சி நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
2–வது பட்டியலில் நேற்று அந்த கட்சியில் சேர்ந்த காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி பெயர் இடம் பெறுகிறது. அவரைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர் சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, பிரபல பாடகர் ரப்பி ஷெர்கில், ராக்கி பிர்லா ஆகியோரது பெயர்களும் இடம் பெறுகிறது.
ஆதர்ஷ் சாஸ்திரி லக்னோ தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் லால்ஜி தாண்டனை எதிர்த்தும், ரப்பி ஷெர்கில் அமிர்தசரஸ் தொகுதியிலும், ராக்கி பிர்லா வடமேற்கு டெல்லியிலும் போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ கம்பெனி நிர்வாக இயக்குனர் ராஜீவ் பஜாஜ் பெயரும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலில் இடம் பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் புதுடெல்லி தொகுதியில் நிறுத்தப்படுகிறார்.
தொழில் அதிபரான ராஜீவ் பஜாஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீவிர ஆதரவாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரமின்றி கிடந்த ஆதார் அட்டை மூட்டை

மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலின் ஆற்றங்கரையோரம் கேட்பாரற்று அனாதையாக கிடந்த ஆதார் அட்டைகள் மற்றும் அரசு தொடர்பான ஆவணங்கள் அரசின் அலட்சியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளதாக அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

அரசின் உதவித்தொகை, மானியம் உள்ளிட்ட பணச்சலுகைகளை ஏழை, எளிய மக்கள் வங்கிகளின் மூலம் நேரடியாக பெற்று பலன் அடையும் வகையில் ஆதார் அடையாள அட்டை திட்டத்தை மத்திய அரசு அறிமுகப்படுத்தியது.

இதற்காக நாடு முழுவதும் புகைப்படம் எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. லட்சக்கணக்கானோருக்கு அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும் பலரது அடையாள அட்டைகள் தயாரிக்கப்பட்டு, வினியோகத்திற்காக மாவட்ட ஆணையாளர்களின் அலுவலகங்களுக்கு தபால் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றன.

அவ்வகையில், மணிப்பூர் மாநில தலைநகர் இம்பாலுக்கு ‘பத்திரமாக’ அனுப்பி வைக்கப்பட்ட ஆதார் அட்டைகள் கொண்ட தபால் மூட்டை இம்பால் ஆற்றங்கரை பகுதியில் கேட்பாரற்று அனாதையாக கிடப்பதை கண்ட உள்ளூர்வாசிகள், முக்கியமான ஆவணங்களை முறையற்ற வகையில் கையாளும் அரசின் அலட்சியப் போக்கை எண்ணி அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தனர்.

கிழக்கு இம்பால் மாவட்டத்தை சேர்ந்த 769 பேரின் ஆதார் அட்டைகள், எல்.ஐ.சி. உள்ளிட்ட காப்பீடு நிறுவனங்களின் முக்கிய ஆவணங்களும் அந்த தபால் மூட்டைக்குள் இருந்தன. இந்த மூட்டையை ஆற்றங்கரையோரத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை பார்த்த உள்ளூர்வாசிகள் ஊடகங்களுக்கு தகவல் அளித்தனர். ஊடகங்களின் மூலம் தபால் துறையின் அலட்சியப் போக்கு தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

‘இதைப் போன்று எத்தனை ஆதார் அட்டை மூட்டைகள் நாடெங்கிலும் உள்ள ஆற்றங்கரை ஓரங்களிலும், குப்பைத் தொட்டிகளிலும் கேட்பாரற்று கிடக்கின்றனவோ? இவை கிடைக்கப் பெறாத மக்கள் அரசின் பணப்பலன்களைப் பெற என்னப் பாடுபடப்போகிறார்களோ?’ என இம்பால் நகரை சேர்ந்த ஒரு முதியவர் வேதனையுடன் கூறினார்.

கடந்த 2012-ம் ஆண்டு டிசம்பர் மாதம் ஆந்திர தலைநகர் ஐதராபாத்தின் குப்பைத் தொட்டி ஒன்றில் 850 ஆதார் அட்டைகள் கண்டெடுக்கப்பட்டது நினைவிருக்கலாம்.

வேளாண்மை துறை சார்பில் ரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயற்கை வள மேலாண்மை இயக்கக அலுவலகக் கட்டடம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்திற்கு பயிற்சிக் கூடம் மற்றும் ஆய்வகம், நுண்ணுயிரியல் துறை உயிர் உரங்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், எரிசக்தி பயிற்சிக் கூடம், மரபணு வங்கி துறை பயிற்சிக் கூடம் மற்றும் ஆய்வகம், அச்சுக்கூடம் விரிவாக்கம், ஆசிரியர் விடுதி, பன்னாட்டு மாணவர் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கோயம் புத்தூர் மாவட்டம், ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்புக் கிடங்கு; மேட்டுப்பாளையத்தில் உள்ள வன கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் 1 கோடியே 28 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி, கலந்தாய்வு அரங்கம் மற்றும் விருந்தினர் விடுதி; நீலகிரி மாவட்டம், கூடலூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி நிலையம்;
விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டுவரும் தங்களது விளைபொருட்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாத் திடவும், இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெறவும், விஞ்ஞான முறைப் படி சேமித்து, உரியகாலத்தில் விற்பனை செய்து பயன்பெறவும், விருதுநகர், தஞ்சாவூர் மாவட்டம்–தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் வல்லம், அரியலூர் மாவட்டம்–ஜெயங்கொண்டம், திருநெல்வேலி மாவட்டம்–திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில், ஈரோடு மாவட்டம்– கொடுமுடி மற்றும் அவல்பூந்துரை, மதுரை மாவட்டம்– திருமங்கலம், தேனி மாவட் டம்–தேனி மற்றும் கம்பம், நாமக்கல் மாவட்டம்–நாமகிரிப்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டம்– ஆர்.எஸ். மங்களம், விழுப்புரம் மாவட்டம்– கள்ளக்குறிச்சி, தியாகத் துருக்கம், சங்கராபுரம், வளத்தி, உழுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம்–கடலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்களில் எடை மேடை, எடையிடும் கருவி, ஈரமானி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 22 நவீன சேமிப்புக் கிடங்குகள்;
காய்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைக்குப் பின் பாதுகாப்பு இல்லாததால் ஏற்படும் இழப்பினைத் தவிர்க்கவும், அதன் சேமிப்பு காலத்தை நீட்டித்து, குறைந்த செலவில் பாதுகாத்து விற்பனை செய்திட விருதுநகர் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு குளிர்பதன கிடங்கு; விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த விளைபொருட்களை வணிகர்கள் இருப்பு வைத்து பரிவர்த்தனை செய்திட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வணிகர் கடைகள்;
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை அவர்கள் விரைவாகவும், சிரமமின்றியும் விற்பனை செய்திட ஏதுவாக அரியலூர் மாவட்டம் - அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம், மதுரை மாவட்டம் - வாடிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று பரிவர்த்தனைக் கூடங்கள்; நுகர்வோருக்குத் தரமான, கலப்படமற்ற உணவு பொருட்கள் கிடைத்திடும் வகையில் தேனியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அக்மார்க் ஆய்வகம்;
விவசாயிகள் அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் நோக்கத்துடன், வேளாண்துறை, விதைச்சான்று துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் இதர துறைகளின் அலுவலகங்கள், கூட்ட அறை, கண்காட்சி அறை, கணிணி அறை, வேளாண்மை விரிவாக்க மையக்கிடங்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 10 மாவட்டங்களில் தேர்ந்தெடுத்த 10 வட்டாரங்களில் 10 உழவர் மையங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைத்திடும் வகையில், முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்ச நல்லூரில் 1 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உழவர் மையம்;
விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டு வரும் வேளாண் துறைக்கென மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைத்திடும் வகையில், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங் கிணைந்த வேளாண்மைத் துறை அலுவலக வளாக புதிய கட்டடங்கள்; என 39 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை சார்ந்த கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நாவலூர்குட்டப்பட்டு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவிலும் தலா 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உணவு பதப்படுத்தும் தொழில் முனைப்பு மையம் மற்றும் பயிற்சி நிலையங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவியர் விடுதிக்கான கூடுதல் கட்டடம், உயிர் தொழில்நுட்பவியல் துறையின் முதல் தளத்தில் முதுநிலை விரிவுரை அரங்கம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கூடுதல் விரிவுரை அரங்கம், பட்டு வளர்ப்புத் துறையில் அலுவலகம் மற்றும் வகுப்பறை, பயிர்வினையியல் துறையின் முதல் தளத்தில் முதுநிலை விரிவுரை அரங்கம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வகுப்பறை, மாணவ, மாணவியர் விடுதியில் ஓய்வு அறை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள காய்கறி துறைக்கு கூடுதல் கட்டடம், வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மையத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வுக் கூடம்;
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கலையரங்கம்; தேனி மாவட்டம், பெரிய குளத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில் இரண்டாம் தள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்டங் களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களில் நிருவாகக் கட்டடங்கள்; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை; கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலும், பாலூரில் காய்கறி ஆராய்ச்சி நிலையத்திலும் புதிய அலுவலகக் கட்டடங்கள்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூர்– வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கத்திற்கு கூடுதல் கட்டடம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் விடுதி என 5 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான கட்டடங்கள்; என 13 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண் துறை சார்ந்த கட்டடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
வேளாண் பாசனத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கவும், அதனுடன் நுண்ணீர் பாசன அமைப்புகளை இணைத்தும் ஒரு புதிய திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா 15.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, வேளாண்மைப் பொறியியல் துறையால் தானியங்கி சாய்மான வசதியுடன் கூடிய சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரை திறன் கொண்ட ஏ.சி. மோட்டார் விவசாய பம்புசெட் அமைப்புகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து செயல்படுத்திடும் திட்டத் தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்து, நான்கு விவசாயி களுக்கு நுண்ணீர்ப் பாசன அமைப்புடன் இணைக்கப் பட்ட சூரியசக்தியால் இயங்கும் விவசாய பம்புசெட்டுகளை வாங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மைத் துறையில் வட்டார அளவில் பணியாற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்களின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 166 புதிய ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
மொத்தம் வேளாண்மைத் துறையின் சார்பில் 162 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் தாமோதரன், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, வேளாண்மை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை விற்பனை–வேளாண் வணிகத் துறை இயக்குநர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

விஜயகாந்தை சமாதானப்படுத்த தொகுதிகளை குறைப்பதா?: தமிழக பா.ஜனதா மீது அன்புமணி பாய்ச்சல்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்து விட்ட நிலையில் தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகளை சேர்க்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வருகிறது. பா.ஜனதா தலைவர்கள் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் இதுவரை கூட்டணி உறுதியாக வில்லை.

வண்டலூரில் மோடி பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்ய திட்டமிட்டனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை முடியாததால் யாரும் பங்கேற்க வில்லை. பா.ம.க. தரப்பில் ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். எனவே, அந்த தொகுதிகள் கட்டாயம் வேண்டும். மேலும் சமூக அமைப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 தொகுதிகள் வேண்டும் என்று பா.ம.க.தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக பா.ஜனதா தலைவர்கள் மீது அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி விஷயத்தில் தமிழக பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறை சரியில்லை என்று நரேந்திரமோடி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் சிலரிடமும் அன்புமணி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி அமைய காலதாமதத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர்கள் தான் காரணம் என்று அன்புமணி வருத்தப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோர் தங்கள் சொந்த வெற்றியை கருத்தில் கொண்டு செயல் படுவதாகவும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை பற்றி கவலைப்பட வில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் தே.மு.தி.க. வாக்கு வங்கி ஆதரவுடன் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.

விஜயகாந்த்தை சமாதனப்படுத்த பா.ம.க. தொகுதிகளை குறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று அன்புமணி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக கூட்டணி பற்றி இறுதி செய்ய காத்திருந்ததாகவும் ஆனால் தமிழக பா.ஜனதா தலைவர்கள் தே.மு.தி.க.வுக்காக காத்திருந்ததாகவும் பா.ம.க. நிர்வாகிகள் கூறினார்கள்.

பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் பா.ம.க.வுடன் கூட்டணி ஓப்பந்தத்தை இறுதி செய்யும் படி கூறி இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தலைவர்கள் தான் காலம் தாழ்த்தி வருவதாக பா.ம.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி தமிழக பா.ஜனதா நிர்வாகிகளிடம் கேட்டபோது, பா.ம.க. குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் இருக்கிறது.

தே.மு.தி.க.வுக்கு அனைத்து தொகுதிகளிலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே தே.மு.தி.க.வையும் கூட்டணியில் இணைத்து கூட்டணி பலத்துடன் பல தொகுதிகளை கைபற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம். இரு கட்சிகளுடனும் பேசி கொண்டிருக்கிறோம். பா.ம.க.தங்களுக்கு செல்வாக்குள்ள 10 தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

கூட்டணி என்றால் ஒவ்வொரு கட்சியின் ஆதரவுடன் மற்ற கட்சிகள் வெற்றி பெறவேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு மிக்க இடங்களில் அவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று நினைத்தால் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவேண்டாமா? ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் எல்லாமே கேட்பதால் தான் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றனர்.

தாம்பரத்தில் ரெயில் மறியல்: சோனியா உருவபொம்மை எரிப்பு- நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ததால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்தும் ராஜீவ் கொலையாளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
இக்கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் மாவட்ட செயலாளர் ராஜன் தலைமையில் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் திரண்டனர். 6–வது பிளாட் பாரத்தில் செங்கல்பட்டு செல்ல தயாராக இருந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். சுமார் 30 நிமிடம் போராட்டம் நீடித்தது. ரெயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அழைத்து வந்தனர்.
அப்போது அவர்கள் திடீர் என தாங்கள் மறைத்து வைத்து இருந்த சோனியா, ராகுல் காந்தி உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 50 பேரை கைது செய்தனர்.

ஜி-20 கூட்டத்தில் பங்கேற்கும் நிதி மந்திரி ப.சிதம்பரம் சிட்னி நகரம் வந்தடைந்தார்


‘ஜி-20’ என்றழைக்கப்படும் வளரும் நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் பிரபல வங்கிகளின் மூத்த அதிகாரிகள் கலந்தாலோசிக்கும் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இந்திய நிதி மந்திரி ப.சிதம்பரம் இன்று சிட்னி நகரை வந்தடைந்தார்.

சர்வதேச நிதியத்தில் செய்யப்பட வேண்டிய சீர்திருத்தங்கள் தொடர்பாக விவாதிக்கப்படவுள்ள இக்கூட்டத்தில் நாளை பங்கேற்கும் அவர் 3 நாட்கள் இங்கு தங்கி சவுத் வேல்ஸ் நாட்டின் அரசு பிரதிநிதிகள் மற்றும் முதலீட்டு நிறுவன பிரதிநிதிகளை சந்தித்து பேசுகிறார்.

பிரபல தொழிலதிபர்களுடனான வட்ட மேஜை சந்திப்பில் பங்கேற்கும் ப.சிதம்பரம், முதலீட்டாளர்கள் சிறப்புக் கூட்டத்திலும் சிறப்புரையாற்றுகிறார். வரும் 25-ம் தேதி சிட்னி நகரில் இருந்து புறப்பட்டும் அவர் இந்தியா சென்றடைகிறார்.

இந்திய ரிசர்வ் வங்கி கவர்னர் ரகுராம் ராஜன் மற்றும் நிதி அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் நிதி மந்திரியுடன் சிட்னி நகருக்கு வந்துள்ளனர்.