Saturday, February 22, 2014

வேளாண்மை துறை சார்பில் ரூ.162.50 கோடி செலவில் திட்டங்கள்: ஜெயலலிதா தொடங்கி வைத்தார்

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:–
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 6 கோடியே 35 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள இயற்கை வள மேலாண்மை இயக்கக அலுவலகக் கட்டடம், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையத்திற்கு பயிற்சிக் கூடம் மற்றும் ஆய்வகம், நுண்ணுயிரியல் துறை உயிர் உரங்கள் மற்றும் தரக் கட்டுப்பாட்டு ஆய்வகம், எரிசக்தி பயிற்சிக் கூடம், மரபணு வங்கி துறை பயிற்சிக் கூடம் மற்றும் ஆய்வகம், அச்சுக்கூடம் விரிவாக்கம், ஆசிரியர் விடுதி, பன்னாட்டு மாணவர் விடுதி ஆகியவற்றை திறந்து வைத்தார்.
மேலும், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் சார்பில் கோயம் புத்தூர் மாவட்டம், ஆழியார் நகர் தென்னை ஆராய்ச்சி நிலையத்தில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விதை சேமிப்புக் கிடங்கு; மேட்டுப்பாளையத்தில் உள்ள வன கல்லூரி மற்றும் ஆராயச்சி நிலையத்தில் 1 கோடியே 28 லட்சத்து 39 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாணவியர் விடுதி, கலந்தாய்வு அரங்கம் மற்றும் விருந்தினர் விடுதி; நீலகிரி மாவட்டம், கூடலூரில் 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வீரிய ஒட்டு நெல் ஆராய்ச்சி நிலையம்;
விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களுக்கு கொண்டுவரும் தங்களது விளைபொருட்களை இயற்கை இடர்பாடுகளிலிருந்து பாதுகாத் திடவும், இருப்பு வைத்து பொருளீட்டுக் கடன் பெறவும், விஞ்ஞான முறைப் படி சேமித்து, உரியகாலத்தில் விற்பனை செய்து பயன்பெறவும், விருதுநகர், தஞ்சாவூர் மாவட்டம்–தஞ்சாவூர், கும்பகோணம், பாபநாசம் மற்றும் வல்லம், அரியலூர் மாவட்டம்–ஜெயங்கொண்டம், திருநெல்வேலி மாவட்டம்–திருநெல்வேலி மற்றும் சங்கரன்கோவில், ஈரோடு மாவட்டம்– கொடுமுடி மற்றும் அவல்பூந்துரை, மதுரை மாவட்டம்– திருமங்கலம், தேனி மாவட் டம்–தேனி மற்றும் கம்பம், நாமக்கல் மாவட்டம்–நாமகிரிப்பேட்டை, இராமநாதபுரம் மாவட்டம்– ஆர்.எஸ். மங்களம், விழுப்புரம் மாவட்டம்– கள்ளக்குறிச்சி, தியாகத் துருக்கம், சங்கராபுரம், வளத்தி, உழுந்தூர்பேட்டை, கடலூர் மாவட்டம்–கடலூர் மற்றும் விருத்தாச்சலம் ஆகிய இடங்களிலுள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகங்களில் எடை மேடை, எடையிடும் கருவி, ஈரமானி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ள 22 கோடி ரூபாய் மதிப்பீட்டில் தலா 2000 மெட்ரிக் டன் கொள்ளளவு கொண்ட 22 நவீன சேமிப்புக் கிடங்குகள்;
காய்கறிகள் மற்றும் பழங்கள் அறுவடைக்குப் பின் பாதுகாப்பு இல்லாததால் ஏற்படும் இழப்பினைத் தவிர்க்கவும், அதன் சேமிப்பு காலத்தை நீட்டித்து, குறைந்த செலவில் பாதுகாத்து விற்பனை செய்திட விருதுநகர் மாவட்ட ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் 1 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒரு குளிர்பதன கிடங்கு; விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்த விளைபொருட்களை வணிகர்கள் இருப்பு வைத்து பரிவர்த்தனை செய்திட ஏதுவாக விருதுநகர் மாவட்ட ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் 80 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 10 வணிகர் கடைகள்;
ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் விவசாயிகள் கொண்டு வந்த விளைபொருட்களை அவர்கள் விரைவாகவும், சிரமமின்றியும் விற்பனை செய்திட ஏதுவாக அரியலூர் மாவட்டம் - அரியலூர் மற்றும் ஜெயங்கொண்டம், மதுரை மாவட்டம் - வாடிப்பட்டி ஆகிய இடங்களில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் 1 கோடியே 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மூன்று பரிவர்த்தனைக் கூடங்கள்; நுகர்வோருக்குத் தரமான, கலப்படமற்ற உணவு பொருட்கள் கிடைத்திடும் வகையில் தேனியில் 20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள அக்மார்க் ஆய்வகம்;
விவசாயிகள் அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் அறிந்துகொள்ள வழிவகை செய்யும் நோக்கத்துடன், வேளாண்துறை, விதைச்சான்று துறை, தோட்டக்கலைத் துறை மற்றும் இதர துறைகளின் அலுவலகங்கள், கூட்ட அறை, கண்காட்சி அறை, கணிணி அறை, வேளாண்மை விரிவாக்க மையக்கிடங்கு ஆகியவற்றை ஒருங்கிணைத்து, 10 மாவட்டங்களில் தேர்ந்தெடுத்த 10 வட்டாரங்களில் 10 உழவர் மையங்களை ஒழுங்குமுறை விற்பனைக்கூட வளாகத்தில் அமைத்திடும் வகையில், முதற்கட்டமாக திருச்சிராப்பள்ளி மாவட்டம், மணச்ச நல்லூரில் 1 கோடியே 49 லட்சத்து 69 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள உழவர் மையம்;
விவசாயிகளின் நலனை கருத்திற்கொண்டு செயல்பட்டு வரும் வேளாண் துறைக்கென மாவட்ட அளவிலான ஒருங்கிணைந்த அலுவலக வளாகம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் அமைத்திடும் வகையில், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி மற்றும் பெரம்பலூர் மாவட்டங்களில், மொத்தம் 4 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள ஒருங் கிணைந்த வேளாண்மைத் துறை அலுவலக வளாக புதிய கட்டடங்கள்; என 39 கோடியே 3 லட்சத்து 8 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண்மைத் துறை சார்ந்த கட்டடங்களை முதல்–அமைச்சர் ஜெயலலிதா திறந்து வைத்தார்.
மேலும் திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், நாவலூர்குட்டப்பட்டு மகளிர் தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்திலும், கோயம்புத்தூர் மாவட்டம், கிணத்துக்கடவிலும் தலா 1 கோடியே 10 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான உணவு பதப்படுத்தும் தொழில் முனைப்பு மையம் மற்றும் பயிற்சி நிலையங்கள்;
கோயம்புத்தூர் மாவட்டம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக வளாகத்தில் 5 கோடியே 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள மாணவியர் விடுதிக்கான கூடுதல் கட்டடம், உயிர் தொழில்நுட்பவியல் துறையின் முதல் தளத்தில் முதுநிலை விரிவுரை அரங்கம், வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கூடுதல் விரிவுரை அரங்கம், பட்டு வளர்ப்புத் துறையில் அலுவலகம் மற்றும் வகுப்பறை, பயிர்வினையியல் துறையின் முதல் தளத்தில் முதுநிலை விரிவுரை அரங்கம், திறந்தவெளி மற்றும் தொலைதூரக் கல்வி இயக்ககத்தில் வகுப்பறை, மாணவ, மாணவியர் விடுதியில் ஓய்வு அறை, தோட்டக்கலை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்திலுள்ள காய்கறி துறைக்கு கூடுதல் கட்டடம், வேளாண்மை காலநிலை ஆராய்ச்சி மையத்தில் வகுப்பறை மற்றும் ஆய்வுக் கூடம்;
தூத்துக்குடி மாவட்டம், கிள்ளிகுளத்தில் உள்ள வேளாண்மைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் கலையரங்கம்; தேனி மாவட்டம், பெரிய குளத்தில் தோட்டக்கலைக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத் தில் இரண்டாம் தள அலுவலகக் கட்டடம்; கன்னியாகுமரி, இராமநாதபுரம் மாவட்டங் களில் உள்ள வேளாண் அறிவியல் நிலையங்களில் நிருவாகக் கட்டடங்கள்; திருநெல்வேலி மாவட்டம், அம்பாசமுத்திரம் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கம் மற்றும் தேர்வு அறை; கடலூர் மாவட்டத்திலுள்ள கரும்பு ஆராய்ச்சி நிலையத்திலும், பாலூரில் காய்கறி ஆராய்ச்சி நிலையத்திலும் புதிய அலுவலகக் கட்டடங்கள்;
திருச்சிராப்பள்ளி மாவட்டம், குமுளூர்– வேளாண்மைப் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் விரிவுரை அரங்கத்திற்கு கூடுதல் கட்டடம், புதுக்கோட்டை மாவட்டம், வம்பன் தேசிய பயறு வகை ஆராய்ச்சி நிலையத்தில் விவசாயிகள் விடுதி என 5 கோடியே 93 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய்க்கான கட்டடங்கள்; என 13 கோடியே 41 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டிலான வேளாண் துறை சார்ந்த கட்டடங்களுக்கு முதல்–அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார்.
வேளாண் பாசனத்திற்கு ஒரு சிறந்த மற்றும் நிரந்தரத் தீர்வு காணும் வகையில், சூரிய சக்தியால் இயங்கும் பம்பு செட்டுகளை விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்கவும், அதனுடன் நுண்ணீர் பாசன அமைப்புகளை இணைத்தும் ஒரு புதிய திட்டம் 100 கோடி ரூபாய் மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும் என்று முதல்– அமைச்சர் ஜெயலலிதா 15.5.2013 அன்று சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.
அதன்படி, வேளாண்மைப் பொறியியல் துறையால் தானியங்கி சாய்மான வசதியுடன் கூடிய சூரிய சக்தி மூலம் இயங்கும் 5 குதிரை திறன் கொண்ட ஏ.சி. மோட்டார் விவசாய பம்புசெட் அமைப்புகளை நுண்ணீர் பாசன அமைப்புடன் இணைத்து செயல்படுத்திடும் திட்டத் தினை முதல்–அமைச்சர் ஜெயலலிதா துவக்கி வைத்து, நான்கு விவசாயி களுக்கு நுண்ணீர்ப் பாசன அமைப்புடன் இணைக்கப் பட்ட சூரியசக்தியால் இயங்கும் விவசாய பம்புசெட்டுகளை வாங்குவதற்கான ஒப்பளிப்பு ஆணைகளை வழங்கினார்.
வேளாண்மைத் துறையில் வட்டார அளவில் பணியாற்றும் வேளாண்மை உதவி இயக்குநர்களின் பயன்பாட்டிற்காக 10 கோடியே 4 லட்சம் ரூபாய் செலவில் வாங்கப்பட்ட 166 புதிய ஜீப்புகளை வழங்கும் அடையாளமாக 3 ஓட்டுநர்களுக்கு வாகனங்களுக்கான சாவிகளை முதல்– அமைச்சர் ஜெயலலிதா வழங்கினார்.
மொத்தம் வேளாண்மைத் துறையின் சார்பில் 162 கோடியே 48 லட்சத்து 28 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான திட்டங்களை முதல்– அமைச்சர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார்.
நிகழ்ச்சியில், அமைச்சர் தாமோதரன், தலைமைச் செயலாளர் ஷீலா பால கிருஷ்ணன், வேளாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் சந்தீப் சக்சேனா, வேளாண்மை இயக்குநர் ராஜேந்திரன், வேளாண்மை விற்பனை–வேளாண் வணிகத் துறை இயக்குநர் அனில் மேஷ்ராம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழக துணை வேந்தர் ராமசாமி மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.