Saturday, February 22, 2014

விஜயகாந்தை சமாதானப்படுத்த தொகுதிகளை குறைப்பதா?: தமிழக பா.ஜனதா மீது அன்புமணி பாய்ச்சல்

பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா கூட்டணியில் ம.தி.மு.க. சேர்ந்து விட்ட நிலையில் தே.மு.தி.க., பா.ம.க ஆகிய கட்சிகளை சேர்க்க கடந்த சில மாதங்களாக முயற்சிகள் நடந்து வருகிறது. பா.ஜனதா தலைவர்கள் பா.ம.க. இளைஞர் அணி தலைவர் அன்புமணி ராமதாசுடன் பல கட்ட பேச்சு வார்த்தை நடத்தி விட்டனர். ஆனால் இதுவரை கூட்டணி உறுதியாக வில்லை.

வண்டலூரில் மோடி பொதுக் கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க செய்ய திட்டமிட்டனர். ஆனால் கூட்டணி பேச்சு வார்த்தை முடியாததால் யாரும் பங்கேற்க வில்லை. பா.ம.க. தரப்பில் ஏற்கனவே 10 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை அறிவித்து விட்டனர். எனவே, அந்த தொகுதிகள் கட்டாயம் வேண்டும். மேலும் சமூக அமைப்புகளுக்கு குறைந்த பட்சம் 2 தொகுதிகள் வேண்டும் என்று பா.ம.க.தரப்பில் வலியுறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் கூட்டணி பேச்சுவார்த்தையில் தமிழக பா.ஜனதா தலைவர்கள் மீது அன்புமணி ராமதாஸ் அதிருப்தியில் இருப்பதாக பா.ம.க. வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கூட்டணி விஷயத்தில் தமிழக பா.ஜனதா தலைவர்களின் அணுகுமுறை சரியில்லை என்று நரேந்திரமோடி மற்றும் பா.ஜனதா மேலிட தலைவர்கள் சிலரிடமும் அன்புமணி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

கூட்டணி அமைய காலதாமதத்துக்கு தமிழக பா.ஜனதா தலைவர்கள் தான் காரணம் என்று அன்புமணி வருத்தப்பட்டுள்ளார். அந்த கட்சியின் மாநில தலைவர் பொன்.ராதாகிருஷ்ணன் மற்றும் தேசிய செயலாளர் இல.கணேசன் ஆகியோர் தங்கள் சொந்த வெற்றியை கருத்தில் கொண்டு செயல் படுவதாகவும் கட்சி மற்றும் கூட்டணி கட்சிகளின் வெற்றியை பற்றி கவலைப்பட வில்லை. அவர்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் தே.மு.தி.க. வாக்கு வங்கி ஆதரவுடன் வெற்றி பெற வேண்டும் என்பதில் மட்டும் குறியாக இருக்கிறார்கள்.

விஜயகாந்த்தை சமாதனப்படுத்த பா.ம.க. தொகுதிகளை குறைக்க முயற்சி செய்கிறார்கள் என்று அன்புமணி வருத்தத்துடன் கூறியதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கடந்த 20 நாட்களுக்கு மேலாக கூட்டணி பற்றி இறுதி செய்ய காத்திருந்ததாகவும் ஆனால் தமிழக பா.ஜனதா தலைவர்கள் தே.மு.தி.க.வுக்காக காத்திருந்ததாகவும் பா.ம.க. நிர்வாகிகள் கூறினார்கள்.

பா.ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் பா.ம.க.வுடன் கூட்டணி ஓப்பந்தத்தை இறுதி செய்யும் படி கூறி இருக்கிறார்கள். ஆனால் இங்குள்ள தலைவர்கள் தான் காலம் தாழ்த்தி வருவதாக பா.ம.க.வினர் குற்றம் சாட்டுகிறார்கள். இது பற்றி தமிழக பா.ஜனதா நிர்வாகிகளிடம் கேட்டபோது, பா.ம.க. குறிப்பிட்ட தொகுதிகளில் மட்டும் செல்வாக்குடன் இருக்கிறது.

தே.மு.தி.க.வுக்கு அனைத்து தொகுதிகளிலும் ஓரளவு செல்வாக்கு இருக்கிறது. எனவே தே.மு.தி.க.வையும் கூட்டணியில் இணைத்து கூட்டணி பலத்துடன் பல தொகுதிகளை கைபற்ற வேண்டும் என்ற எண்ணத்துடன் செயல்படுகிறோம். இரு கட்சிகளுடனும் பேசி கொண்டிருக்கிறோம். பா.ம.க.தங்களுக்கு செல்வாக்குள்ள 10 தொகுதிகளையும் விட்டுத்தர மாட்டோம் என்பதில் பிடிவாதமாக இருக்கிறார்கள்.

கூட்டணி என்றால் ஒவ்வொரு கட்சியின் ஆதரவுடன் மற்ற கட்சிகள் வெற்றி பெறவேண்டும். அவர்களுக்கு செல்வாக்கு மிக்க இடங்களில் அவர்கள் மட்டுமே போட்டியிட வேண்டும் என்று நினைத்தால் கூட்டணி கட்சிகள் வெற்றி பெறவேண்டாமா? ஒரு சில தொகுதிகளை கூட்டணி கட்சிகள் எல்லாமே கேட்பதால் தான் பேச்சுவார்த்தை நீடிக்கிறது. விரைவில் சுமூக உடன்பாடு ஏற்படும் என்றனர்.