Saturday, February 22, 2014

தாம்பரத்தில் ரெயில் மறியல்: சோனியா உருவபொம்மை எரிப்பு- நாம் தமிழர் கட்சியினர் 50 பேர் கைது

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் குற்றவாளிகள் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து ஆயுள் தண்டனையாக குறைத்தது.
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையடுத்து இந்த 3 பேர் உள்பட ராஜீவ் காந்தி கொலையில் தொடர்புடைய 7 பேரும் விடுதலை செய்யப்படுவார்கள் என தமிழக அரசு அறிவித்தது.
இதை எதிர்த்து மத்திய அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு செய்ததால் ராஜீவ் கொலையாளிகள் விடுதலைக்கு இடைக்கால தடை விதித்தது. மத்திய அரசின் இந்த செயலை கண்டித்தும் ராஜீவ் கொலையாளிகளை உடனே விடுதலை செய்ய வேண்டும் என்று கோரியும் நாம் தமிழர் கட்சியினர் இன்று ரெயில் மறியலில் ஈடுபட்டனர்.
இக்கட்சியை சேர்ந்த சுமார் 50 பேர் மாவட்ட செயலாளர் ராஜன் தலைமையில் காலை 10.30 மணிக்கு தாம்பரம் ரெயில் நிலையத்தில் திரண்டனர். 6–வது பிளாட் பாரத்தில் செங்கல்பட்டு செல்ல தயாராக இருந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். சுமார் 30 நிமிடம் போராட்டம் நீடித்தது. ரெயில்வே போலீசார் அவர்களை அப்புறப்படுத்தி அழைத்து வந்தனர்.
அப்போது அவர்கள் திடீர் என தாங்கள் மறைத்து வைத்து இருந்த சோனியா, ராகுல் காந்தி உருவ பொம்மையை தீ வைத்து எரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் அவர்கள் 50 பேரை கைது செய்தனர்.