Sunday, February 23, 2014

சவூதி இளவரசர் 26-ம் தேதி இந்தியா வருகை


சவூதி அரேபியா நாட்டின் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் 3 நாள் பயணமாக வரும் 26-ம் தேதி இந்தியா வருகிறார். 

சமீபத்தில் சவூதி அரேபியா நாட்டுக்கு சென்றிருந்த இந்திய துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி, அந்நாட்டின் பட்டத்து இளவரசரை சந்தித்த போது இந்தியாவுக்கு வரும்படி அழைப்பு விடுத்திருந்தார். 

அவரது அழைப்பை ஏற்று சவுதியின் துணை பிரதமராகவும், ராணுவ அமைச்சராகவும் பொறுப்பு வகிக்கும் இளவரசர் சல்மான் பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் வரும் புதன்கிழமை இந்தியா வருகிறார். 

ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி, பிரதமர் மன்மோகன் சிங், துணை ஜனாதிபதி ஹமித் அன்சாரி ஆகியோரை சந்தித்து இரு நாடுகளுக்கிடையிலான நட்புறவை மேம்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்த திட்டமிட்டுள்ள இளவரசருடன் சவூதியின் மந்திரிகள், அரசு அதிகாரிகள் மற்றும் பிரபல தொழிலதிபர்களும் வருகின்றனர். 

கடந்த 2010-ம் ஆண்டு ரியாத் மாகாண கவர்னராக பதவி வகித்த போது இந்தியா வந்திருந்த இவர் தற்போது இரண்டாவது முறையாக டெல்லி வருகிறார். வரும் 28-ம் தேதி வரை இங்கு தங்கியிருப்பார் என மத்திய உள்துறை அமைச்சகம் இன்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

இந்தியா- சவூதி அரேபியாவுக்கிடையில் கடந்த ஆண்டில் மட்டும் 43 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அளவுக்கு இருதரப்பு வர்த்தகம் நடைபெற்றுள்ளது. இந்தியாவுக்கு தேவையான பெட்ரோலிய கச்சா எண்ணையின் பெரும்பகுதி சவூதி அரேபியாவில் இருந்து தான் இறக்குமதி செய்யப்படுகிறது. சுமார் 30 லட்சம் இந்தியர்கள் சவூதியில் வேலை செய்து வருகின்றனர் என்பது நினைவிருக்கலாம். 

சவூதி மன்னரான அப்துல்லா பின் அப்துல் அஜிஸ் அல் சவுத் கடந்த 2006-ம் ஆண்டு புது டெல்லியில் நடைபெற்ற இந்திய குடியரசு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்றது குறிப்பிடத்தக்கது.