Saturday, February 22, 2014

நளினி–முருகன் உருக்கமான சந்திப்பு


ராஜீவ் கொலை வழக்கில் முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகியோரது தூக்கு தண்டனையை சுப்ரீம் கோர்ட்டு ரத்து செய்து உத்தரவிட்டது. மேலும் விடுதலை குறித்து தமிழக அரசு முடிவு எடுக்கலாம் என அறிவித்தது.
இதனையடுத்து முருகன், சாந்தன், பேரறிவாளன் மற்றும் ஆயுள் தண்டனை பெற்ற நளினி, ஜெயக்குமார், ராபர்ட்பயாஸ், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரை விடுதலை செய்ய தமிழக அரசு பரிந்துரை செய்தது. இதனை முதல்–அமைச்சர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார்.
இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் தமிழ் ஆர்வலர்கள் வரவேற்பு அளித்தனர். பல இடங்களில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
வேலூர் ஜெயிலில் இருந்து ராஜீவ் கொலையாளிகள் விடுதலை செய்யப்படுவார்கள் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் அவர்கள் விடுதலையை எதிர்த்து மத்திய அரசு சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதில் ராஜீவ்காந்தி கொலை கைதிகள் விடுதலைக்கு சுப்ரீம் கோர்ட்டு தடைவிதித்தது.
இந்த நிலையில் வேலூர் ஜெயிலில் 15 நாட்களுக்கு ஒருமுறை நடைபெறும் நளினி, முருகன் சந்திப்பு இன்று நடந்தது.
வேலூர் நிலஅபகரிப்பு பிரிவு டி.எஸ்.பி. பிரபாகரன் தலைமையிலான போலீசார் முருகனை பெண்கள் ஜெயிலுக்கு அழைத்து சென்றனர். காலை 7.30 மணி முதல் 8 மணி வரை முருகன்–நளினி சந்தித்து பேசினர்.
அப்போது தூக்குதண்டனை ரத்து குறித்தும், லண்டனில் டாக்டருக்கு படிக்கும் மகள் அரித்ரா பற்றியும் உருக்கமாக பேசிக் கொண்டதாக கூறப்படுகிறது.
விடுதலை தடை செய்யப்பட்டது குறித்து பேசிய போது நளினி கண்ணீர் மல்க பேசியுள்ளார். சந்திப்புக்கு பின்னர் முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
இந்த சந்திப்பு சிறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.