ஆம் ஆத்மி கட்சி சமீபத்தில் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும்
வேட்பாளர்கள் முதல் பட்டியலை அறிவித்தது. இதில் பிரபல சமூக சேவகி மேதா
பட்கர் (மும்பை வட கிழக்கு), முகேஷ் பிஸ்வாஸ் (அமேதி) உள்ளிட்ட 20 பேர்
பெயர் இடம் பெற்றது.
அடுத்ததாக 2–வது பட்டியலை வெளியிட ஆம் ஆத்மி
கட்சி தயாராகி வருகிறது. வேட்பாளர்களை இறுதி செய்வதில் அந்த கட்சி
நிர்வாகிகள் மும்முரமாக செயல்பட்டு வருகிறார்கள்.
2–வது பட்டியலில்
நேற்று அந்த கட்சியில் சேர்ந்த காந்தி பேரன் ராஜ்மோகன் காந்தி பெயர் இடம்
பெறுகிறது. அவரைத் தொடர்ந்து மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதூர்
சாஸ்திரியின் பேரன் ஆதர்ஷ் சாஸ்திரி, பிரபல பாடகர் ரப்பி ஷெர்கில், ராக்கி
பிர்லா ஆகியோரது பெயர்களும் இடம் பெறுகிறது.
ஆதர்ஷ் சாஸ்திரி லக்னோ
தொகுதியில் பாரதீய ஜனதா வேட்பாளர் லால்ஜி தாண்டனை எதிர்த்தும், ரப்பி
ஷெர்கில் அமிர்தசரஸ் தொகுதியிலும், ராக்கி பிர்லா வடமேற்கு டெல்லியிலும்
போட்டியிடுவார்கள் என்று தெரிகிறது.
பஜாஜ் ஆட்டோ கம்பெனி நிர்வாக
இயக்குனர் ராஜீவ் பஜாஜ் பெயரும் ஆம் ஆத்மி வேட்பாளர் பட்டியலில் இடம்
பெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது. இவர் புதுடெல்லி தொகுதியில்
நிறுத்தப்படுகிறார்.
தொழில் அதிபரான ராஜீவ் பஜாஜ், அரவிந்த் கெஜ்ரிவாலின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு தீவிர ஆதரவாளராக மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.