Sunday, February 23, 2014

தலிபான்கள் மீது தொடரும் விமான தாக்குதல்: வசிரிஸ்தானில் இருந்து 50 ஆயிரம் பழங்குடியினர் வெளியேறினர்

வன்முறை தாக்குதல்களின் மூலம் கடந்த பத்து வருடங்களாக 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட உயிர்களைப் பலி வாங்கிய தெஹ்ரிக்-இ-தலிபான் இயக்கத்துடன் பாகிஸ்தான் அரசு கடந்த வாரம் அமைதிப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டது.

எனினும், கடந்த 2010 ஆம் ஆண்டில் கடத்தப்பட்ட 23 துணை ராணுவ சிப்பாய்களைக் கொன்ற விபரத்தை தலிபான் இயக்கம் வெளியிட்டதில் அமைதிப் பேச்சுவார்த்தை பின்னடைவைச் சந்தித்தது.

இந்த நிலையில், தலிபான்கள் மறைந்து வாழும் பழங்குடிப் பகுதியான வசிரிஸ்தானில் விமானத் தாக்குதல் நடத்த பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் உத்தரவிட்டார். வடக்கு வசிரிஸ்தானின் மிர் அலி பகுதி மற்றும் கைபர் பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட அதிரடி விமான தாக்குதலில் 40 தலிபான் தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர்.

கைபர் பகுதி தொழிற்சாலை ஒன்றில் தயாரான வெடிபொருட்களும் இந்த தாக்குதலில் அழிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பகுதிகளில் விமான தாக்குதல் நடத்தி தலிபான்களை அழித்தொழிப்பதற்கான அதிரடி திட்டம் ஒன்றினை பாகிஸ்தான் ராணுவம் தீட்டி வருவதாக தகவல் வெளியானது.

இதனைத் தொடர்ந்து, வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்கள் தங்கள் குடும்பத்தாருடன் கூட்டம் கூட்டமாக அப்பகுதியை விட்டு வெளியேறி வருகினர். கடந்த ஒரு மாத காலத்தில் 50 ஆயிரம் மக்கள் உயிர் பயத்தில் தங்களது வீடுகளை விட்டு வெளியேறியுள்ளதாக பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.