உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள டேராடூனில் நடைபெற்ற பிரச்சாரக் கூட்டத்தில் பங்கேற்று காங்கிரஸ் கட்சியின் துணை தலைவரான ராகுல் காந்தி உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது;
உத்தராகண்ட் மாநிலம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது நமது தேசம் முழுவதும் அதன் பின்னால் நின்று உதவியது. அது போல் நாட்டில் எங்கு பாதிப்புகள் நேர்ந்தாலும், அங்கு சென்று வலியால் துடிப்பவர்களுக்கு அவர்களுக்கு உதவி செய்யுங்கள். அரசியலில் கர்வத்திற்கு என்றும் இடமில்லை. ஒருவருடைய வலியை உணரவேண்டுமானால் ஒவ்வொரு மனிதனும் தன்னிடம் உள்ள கர்வத்தை வெளியேற்றவேண்டும். இன்று இம்மாநில முதலமைச்சரிடம் நிவாரணம் மற்றும் மறுகட்டமைப்பு குறித்து விவாதித்தேன்.
இம்மாநிலத்தில் சுற்றுலா காலம் துவங்குவதற்கு முன் இங்கு மறுகட்டமைப்பு பணிகள் முடிந்துவிடும் என்று அவர் உறுதியளித்துள்ளார். இங்கு பேரிழப்புகள் ஏற்பட்டபோது ராணுவ வீரர்கள் தங்கள் உயிரை துச்சமென நினைத்து ஆபத்தில் சிக்கிய மக்களை காப்பாற்ற நடவடிக்கை எடுத்தனர்.
இம்முயற்சியில் தங்கள் ராணுவ வீரர்கள் சிலரையும் அவர்கள் இழந்தனர். நாட்டில் உள்ள பெண்கள் 12 எரிவாயு சிலிண்டர்கள் வேண்டும் என்றார்கள். அவர்களது கோரிக்கை உடனடியாக நிறைவேற்றப்பட்டது. பெண்கள் முன்னேறாமல் நமது நாடு ஒரு போதும் வல்லரசாக முடியாது. ஒரு நாளைக்கு 18 மணி நேரம் வேலை செய்வதாக முதல்வர் கூறினார்.
நான் அவரிடம் 20 மணி நேரம் வேலை செய்யுங்கள் என்று கேட்டுக்கொண்டுள்ளேன். எனது தந்தை தான் கம்ப்யூட்டரை முதன் முதலில் இந்தியாவிற்கு கொண்டு வந்தார். ஆனால் தகவல் தொழில்நுட்ப புரட்சிக்கு தாங்கள் தான் காரணம் என்று எதிர்க்கட்சினர் கூறுகின்றார். ஆனால் இது முற்றலும் பொய்யான தகவலாகும் என ராகுல் கூறினார்.