அரியானா மாநிலத்தில் உள்ள ரோடக் நகரில் பாராளுமன்ற தேர்தலுக்கான ஆம் ஆத்மி கட்சியின் முதல் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய அரவிந்த் கெஜ்ரிவால் கூறியதாவது; வரும் ஏப்ரல் 1-ந் தேதி முதல் உர விலை உயரப்போகிறது. இதில் பா.ஜ.கவும், காங்கிரஸ் கட்சியும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகின்றது.
எரிவாயு விலை நிர்ணயம் குறித்து மோடிக்கு கடிதம் எழுதினேன். ஆனால் அவரிடம் இருந்து இதுவரை எந்த பதிலும் வரவில்லை. இது தொடர்பாக முகேஷ் அம்பானி மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவிட்டேன். அது போல் கருப்பு பணத்தை கொண்டு வருவோம் என மோடி கூறி வருகிறார். நான் இங்கே அம்பானியின் ஸ்விஸ் வங்கி கணக்கு விவரங்களை கொண்டு வந்துள்ளேன். அதன் மீது மோடி நடவடிக்கை எடுக்க தயாரா என கேள்வியெழுப்புகிறேன்.
இங்கு சாமானிய மக்களின் நிலங்கள் அபகரிக்கப்படுகின்றன. இம்மாநில முதல்வர் பூபீந்தர் சிங் ஹுடா முதலமைச்சராக செயல்படாமல் நிலத்தரகர் போல் செயல்படுகிறார்.
அம்பானி நிறைய செய்திதாள் மற்றும் தொலைக்காட்சி நிறுவனங்களை நடத்தி வருகிறார். அதன் பொறுப்பாசிரியர்களை அழைத்து மோடி மற்றும் ராகுல் சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளை மட்டும் ஒளிபரப்புங்கள். கெஜ்ரிவாலை புறக்கணியுங்கள் என்று கூறியுள்ளார். ஆனால் ஒரு பொறுப்பாசிரியர் மட்டும் தனது பதவியை உடனடியாக ராஜினாமா செய்துவிட்டார். காங்கிரஸ் மற்றும் பா.ஜ.கட்சியினர் டாடா மற்றும் ரிலையன்ஸ் போன்ற பணக்காரர்களுக்காக ஆட்சி நடத்தி வருகின்றனர்.
ஆனால் நாங்கள் ஏழை மக்களுக்காக பணிபுரிந்தோம். உடனே எங்களை அழிக்க நினைக்கிறார்கள். நாங்கள் பதவிக்காக ஆட்சி நடத்த முன்வரவில்லை. மக்களுக்கு நல்லது செய்வதற்காக ஆட்சிக்கு வந்தோம். அவ்வாறு நல்லது செய்யாதவாறு இரண்டு கட்சிகளும் தடுத்ததால் பதவியே தேவையில்லை என்று ராஜினாமா செய்தோம் என கெஜ்ரிவால் பேசினார்.