Sunday, February 23, 2014

இந்திய கருவூலத்தை அபகரிக்க நினைக்கும் கை தடுக்கப்படும்: மோடி பேச்சு


பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளரான நரேந்திர மோடி இன்று பஞ்சாப் மாநிலத்தில் உள்ள லூதியானாவில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

நாட்டிற்கு சேவை செய்ய உங்களது ஆசிர்வாதங்களை எனக்கு வழங்குங்கள். குஜராத்திற்கும் பஞ்சாபிற்கும் சிறப்பு இணைப்பு உள்ளது. புஜ் பகுதியில் நிகழ்ந்த நிலநடுக்கத்தால் குரு நானக் தேவ் தங்கியிருந்த குருத்வாரா சேதமடைந்ததது. அதை வல்லுனர்களை கொண்டு உடனடியாக கட்டி தர நடவடிக்கை எடுத்தோம். 

குஜராத்திலுள்ள கட்ச் பகுதி ஒரு வரண்ட பூமியாகும். அப்பகுதியில் பஞ்சாப் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட பலர் வாழ்ந்து வருகின்றனர். அந்த வரண்ட பூமி அவர்களின் கடுமையான உழைப்பால் இன்று பசுமையாக காட்சி தருகிறது. குஜராத்தில் வசிக்க ஒவ்வொரு இந்தியனுக்கும் உரிமை உள்ளது. அங்கு வசிக்கும் எந்த சீக்கிய விவசாயியும் வெளியேற வேண்டியதில்லை. மாறாக அவர்களுக்கு இடைஞ்சல் தரும் அதிகாரிகள் தான் அங்கிருந்து வெளியேற்றப்படுவார்கள். 

காஷ்மீரிலிருந்து கன்னியாக்குமரி வரை இந்தியா ஒன்றே. இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மனிதனும் இங்குள்ள அனைத்து மாநிலங்களுக்கும் உரிமையுடையவர்கள் ஆவார்கள். உங்கள் ஆசியோடு இந்தியாவிற்கு சேவை வாய்ப்பு எனக்கு கிடைத்தால் இந்திய நாட்டின் கருவூலத்திற்கு பாதுகாவலானாக இருந்து அதை கைப்பற்ற நினைக்கும் "கை" யை தடுப்பேன் என்று மோடி கூறினார்.