Saturday, February 22, 2014

அரசியல் தலைவர்களுடன் நேரடியாக பேஸ் புக்கில் பேச புது வசதி

புதுடெல்லி: இந்தியாவில் சமூக இணைய தளம் மூலமாக பிரபல அரசியல்வாதிகளிடம் நேரடியாக கேள்வி கேட்கும் வசதியை பேஸ் புக் இணையதளம் ஏற்படுத்தியுள்ளது. மக்களவை தேர்தல் 2014 ஏப்ரல் மாதம் தொடங்கி மே மாதம் வரையில் 6 கட்டங்களாக நடைபெறவுள்ளது. இதற்கான விரிவான ஏற்பாடுகளில் தேசிய தேர்தல் ஆணையம் தீவிரமாக உள்ளது. இதையொட்டி அனைத்து கட்சியினரும் தேர்தலுக்கான முன்னேற்பாடுகளையும், பிரச்சாரங்களையும் தொடங்கியுள்ளனர். தொலைக்காட்சிகள் மற்றும் இணையதளங்கள் வழியாக தேர்தல் பிரச்சாரம் மேற்கொள்வது தற்போது புதிய உத்தியாக உள்ளது. இதில்  பேஸ் புக், டுவிட்டர் போன்ற இணைய தளங்களில் ஏற்கனவே நாட்டு நடப்பு குறித்தும், தங்கள் கொள்கைகள் மற்றும் மக்கள் தேவைகள் குறித்தும் கருத்துக்களை அரசியல்வாதிகள் பதிவு செய்து வருகிறார்கள்.

இதற்கு நல்ல வரவேற்பு இருப்பதால், பிரபல அரசியல்வாதிகள் மக்களுடன் நேரலையில் கலந்துரையாட பேஸ்புக்கில் தனியாக ஒரு பக்கத்தை ஆரம்பிக்க அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இத்திட்டம் மார்ச் 3ம் தேதி முதல் செயல்படும். இதில் நரேந்திர மோடி, ஆம் ஆத்மி தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மம்தா பானர்ஜி, லாலு பிரசாத் யாதவ், அகிலேஷ் யாதவ் ஆகியோர் பங்கேற்க உள்ளனர். முதன்முதலில் மார்ச் 3ம் தேதி அன்று மோடி மக்களுடைய கேள்விகளுக்கு பதிலளிக்க உள்ளார். இதுகுறித்து பேஸ்புக்கின் பொது மேலாளர் அன்கி தாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்தியாவில் மட்டும் மாதந்தோறும் 9.3 கோடி பேர் பேஸ் புக் பயன்படுத்துகிறார்கள். தற்போதுள்ள அரசியல் சூழலில் பேஸ்புக் வழியாக நல்லதொரு விவாத மேடையை ஏற்படுத்தி தர முடியும்.

எனவே, இந்தியாவின் பிரபல அரசியல்வாதிகளுடன் நேரடியாக விவாதம் செய்ய வசதியாக பேஸ்புக்கில் தனியாக பக்கம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இதில் அவர்களிடம் நாட்டுக்காக என்ன செய்யப் போகிறார்கள் என்பதை கேட்டுத் தெரிந்து கொள்ளலாம். இந்த பதிவுகளை மக்கள் பார்ப்பது மட்டுமல்லாமல் பகிரவும் செய்ய வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகம் முழுவதும் ஒன்றிணைக்கப்படும்’ என்று கூறியுள்ளார். அறிவியல் வளர்ச்சியை தனது அரசியலுக்கு பயன்படுத்திக் கொள்வதில் எப்போதும் போல மோடி முன்னணியில் இருக்கிறார்